இஸ்லாத்தின் தோற்றத்தின் பின்னர் மத்தியகிழக்கு பிராந்திய நாடான ஐக்கிய அரபு இராச்சியத்தில் 1400 ஆண்டுகள் பழமைவாய்ந்த பள்ளிவாசல்கள் கட்டப்பட்டிருந்தாலும்,உறுதியற்ற மூலப்பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டிருந்ததன் காரணமாக பிற்காலத்தில் அவை பெரும்பாலும் உடைக்கப்பட்டன. அவ்வகையில் தற்போதுஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள பழைமைவாய்ந்த பள்ளிவாசலாக அல்-பித்யா மஸ்ஜித் காணப்படுகின்றது. 2008ஆம் ஆண்டு சிறிய கட்டடங்களை மீள் அமைக்கும்பணியில் ஈடுபட்டிருந்த ஐக்கிய அரபு இராச்சியத்தின் வரலாற்று ஆசிரியர் ரஸாத் புகாஸ் அவர்களின் கருத்தின் அடிப்படையில், பல நுாற்றாண்டுகள் கடந்த நிலையில் தனிச்சிறப்புள்ளபழமைவாய்ந்த கட்டிட அமைப்புடன் அல்-பித்யா மஸ்ஜித் காணப்படுவதாக குறிப்பிடுகின்றார். அல்-பித்யா மஸ்ஜிதானது ஏறத்தாள 600 வருடங்களாக அதே அமைப்பில் காணப்படுவதாகதெரிவிக்கப்படுகின்றது.
தற்போதும் நாளந்தம் ஐவேளை தொழுகை அங்கு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இப்பள்ளிவாசலானது ஐக்கிய அரபு இராச்சியத்தின் புஜைராவில் அல்-பித்யா என்ற கிராமத்தல் அமைந்துள்ளதுடன், ஊரின் பெயரினால் இப்பள்ளிவாசல் அழைக்கப்படுகின்றது. பொதுவாக உலகம் முழுதும் காணப்படும் பள்ளிவாசல்களில் உள்ள குவிமாடம் போன்று, இப்பள்ளிவாசலில் நான்கு குவிமாடங்கள் காணப்படுகின்றன. இப்பள்ளிவாசலானது கட்டப்பட்ட ஆண்டு சரியாக அறியப்படாமல் இருப்பினும், சிட்னி பல்கலைக்கழகம் உடன் புஜைரா தொல்பொருளியல் மற்றும் மரபுரிமைத் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், கி.பி. 1446ஆம் ஆண்டு இப்பள்ளிவாசல் கட்டப்பட்டதாக நம்பப்படுகின்றது. ஐக்கிய அரபு இராச்சியத்தின் தொல்பொருளியல் தளமாக அல்-பித்யா பேணிப்பாதுகாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments